தாய்வான் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பயங்கர புகையிரத விபத்து ஏற்பட்டுள்ளது. 490 பேருடன் சுரங்கப் பாதையால் சென்று கொண்டிருந்த இப் புகையிரதம் திடீரென தடம் புரண்டதால் 48 பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகர் தய்ப்பே இல் இருந்து டைட்டன் என்ற நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த மேற்படி புகையிரதம் அதே புகையிரதப் பாதையில் கிடந்த கட்டுமான ரயில் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாய்வானில் நடந்த மிகவும் பயங்கரமான விபத்தாகும்.
8 பெட்டிகளுடன் சுமார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த மேற்படி புகையிரதம் பாதுகாப்பான பயணத்திற்கு பெயர் பெற்றதாகும். இந்த புகையிரதத்தில் சென்று கொண்டிருந்த பலர் சுற்றுலாப்பயணிகள் என்பதும் வருடாந்த விடுமுறையை கழிப்பதற்காக டைட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் இந்தக் கோர விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தாய்வான் ஜனாதிபதி தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள அதேவேளை விபத்து குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு தாய்வானில் நடந்த புகையிரத விபத்தில் 30 பேர் பலியானதுடன் 112 பேர் காயமடைந்திருந்தனர் அதன் பின்னர் நடந்த கோர விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.