இறக்குமதி செய்யப்பட்ட தேங்காயெண்ணெயில் ஆப்ளாட்டாக்சின் (Aflatoxin) என்னும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விஷ ரசாயனம் அடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பாவனைக்காக சந்தைக்கு விடப்பட்டிருந்த எண்ணெய்களில் 125 மாதிரிகளை நுகர்வோர் அதிகார சபையால் சுமார் 24 மாவட்டங்களில் சேகரித்துதிருந்தது. பின்னர் அதை பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. அந்த 125 மாதிரிகளில் 55 மாதிரிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இன்று கிடைக்கப்பெற்ற எஞ்சிய பெறுபேறுகளில் மேற்படி எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் (Aflatoxin) ரசாயனம் உறுதிப் படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான இரு பவுசர்கள் நீர்கொழும்பு தன்கொட்டுவ பகுதியில் கைப்பற்றப் பட்டிருந்த அதே நேரம் இன்றும் சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்று தம்புள்ளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கொண்டு வரப்பட்ட கொள்கலனில் இருந்த தேங்காய் எண்ணெய் வேறு தொட்டிக்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. 28,000 லிட்டர் இருந்ததாகவும் அது மனித பாவனைக்கு , போக்குவரத்துக்கு அல்லது களஞ்சியப்படுத்த அனுமதி பெற்று இருந்ததா என்பது பற்றி எவ்விதமான தகவலும் இருக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கை நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கொள்கலன் மற்றும் களஞ்சியசாலை சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.