உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. 8 இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் சுமார் 270க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கண்ணீருக்கும் மத்தியில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இன்று இடம்பெற்றிருந்தன. இதில் கொழும்பு மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் வருகை தந்திருந்தனர். தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்ததுடன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவால் தற்போதைய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொள்வதாகவும் சில நேரம் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருத்துக்களால் வெட்கப்படுவதாகவும் கூறிய அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பது தெரிந்து கொண்டு தமது பொறுப்பை நிறைவேற்றாமல் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். இப்படியான ஒரு அழிவை தடுக்கத் தவறிய அவர் மீண்டும் எப்படி ஆடை அணிந்துகொண்டு தேர்தலுக்கு போட்டியிட முடியும்? எப்படி ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியும்? பொறுப்பை நிறைவேற்றாமல் மீண்டும் பொறுப்புக்கு வருவது எப்படி? என்று கேட்கும் அதேவேளை அவரை வீட்டுக்கு சென்று தங்கள் வேலையை பார்க்கும்படி கேட்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது எனவே அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தாமதம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதேபோன்று தமது பொறுப்பை நிறைவேற்றத் தவறிய ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் தற்போது சேவையில் உள்ளார் என்றும் தமது கடமையை சரிவர நிறைவேற்றாதவர்கள் இவர்கள். இந்த விடயங்களை ஆராய இன்னும் ஆணைக்குழு தேவையில்லை எனவும் கடந்து ஆணைக்குழுவில் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். நாங்கள் மீண்டும் ஏமாற்றங்களை சந்திக்க தயாரில்லை நமக்கு நீதி நியாயம் கிடைக்கும் என எதிர் பார்த்துக் கொண்டுள்ளோம் என மேலும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பந்தமாக தாமும் அந்த அரசாங்கத்தில் ஒரு உறுப்பினர் என்ற வகையில் தான் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அதேபோன்று இந்த அரசாங்கமும் இந்த தற்கொலை தாக்குதல் சம்பந்தமாக உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமையால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.