போலியான செய்திகளை பரப்புவதலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
போலியான செய்திகளை வெளியிட்டு நாட்டு மக்களிடத்தில் நாட்டைப்பற்றி ஒருவித அச்சம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதனால் இதை மேலும் தொடர விடாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இது சம்பந்தமாக தற்பொழுது அமைச்சரவைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வர தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சட்டம் தற்போது சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுத்துதல், அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு எதிராக போலிப் பிரச்சாரங்களை செய்தல், சர்வதேசத்தில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல் மற்றும் தனிநபர்களுக்கு களங்கம் ஏற்படுத்துதல் போன்ற விடயங்களை பாதுகாப்பதே ஊடக சுதந்திரம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது அரசாங்கத்தின் ஆதரவு மக்களிடத்தில் குறைந்து கொண்டு செல்வதனால் அதை தடுப்பதற்காக சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கி உள்ளதாகவும் அவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையிலடைக்க முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.