நவரசம் கவிதைத்தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் கவிஞர் அஃனாப் ஜெஸிம் அவர்களின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானது என்று தெரிவித்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை அவரது சட்டத்தரணி செல்லையா தேவபாலன் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.
இதில் பிரதிவாதிகளாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பிரதானி பிரசன்ன டி அல்விஸ், வவுனியா கிளை உப பொலிஸ் பரிசோதகர் கே கே ஆர் அனுர சாந்த, குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலவிதமான காரணங்களை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மனுவில் அவர் கல்வியை நிறைவு செய்த ஜாமியா நளீமியா கலாபீடத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் போதனை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கூறி அஃனாப் ஐ சித்திரவதை செய்வதாகவும் மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அஃனாப் இன் தந்தையிடமும் மேற்படி ஜாமியா நளீமியா கலாபீடத்தில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அஃனாப் ஐ சம்மதிக்க வைக்குமாறும். அவ்வாறு வாக்குமூலம் வழங்கினால் சிறிது நாட்களில் அவரை விடுவிக்க முடியும் என்று தெரிவித்ததாக மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அரசியல் அமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள சிந்தனை, சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், மதம், சமத்துவத்திற்கான உரிமை, எதேச்சையாக கைது செய்தல் மற்றும் இன்னும் பல சுதந்திரங்கள் பறிக்கப் பட்டுள்ளதால் அவரின் தடுப்புக்காவலுக்கு இடைக்கால தடை விதித்து உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் மேலும் மனுவை விசாரணை செய்து நஷ்டஈடாக 100 மில்லியன் ரூபா பெற்றுத்தருமாறும் மனுதாரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேற்படி மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.
நன்றி UTV